சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை - 4 பேரிடம் போலீசார் விசாரணை


சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை - 4 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jan 2019 10:51 PM GMT (Updated: 22 Jan 2019 10:51 PM GMT)

திசையன்விளையில் சிறை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்க பாண்டியன் (வயது 58). இவர் நாகர்கோவில் சிறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருடைய மனைவி ஜெயலட்சுமி வெளியே சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டின் கதவு, பீரோக்களை உடைத்து 125 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று முன்தினம் கொள்ளை நடந்த வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மர்ம நபர்களை விரைந்து பிடித்து, நகையை மீட்கவும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை பிரிவு நிபுணர்கள் மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்து உள்ளனர். அதில் குடும்பத்தினர் தவிர மற்றவர்களின் கைரேகைகளை எடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் நகை கொள்ளை அடித்தது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் கைரேகைகளை சேகரித்தனர். அந்த கைரேகைகளும், கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருக்கும் கைரேகைகளும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்று ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் மர்ம நபர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story