நெல்லையில் லெனின் சிலை திறப்பு விழா மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்


நெல்லையில் லெனின் சிலை திறப்பு விழா மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:30 PM GMT (Updated: 22 Jan 2019 10:51 PM GMT)

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நெல்லையில் நடந்த லெனின் சிலை திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வளாகத்தில் லெனின் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லெனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலை போராட்ட வீரரும், ரஷ்ய புரட்சியை புகழ்ந்து பாடியவருமான மகாகவி பாரதியார் வாழ்ந்த இந்த மண்ணில் புரட்சியாளர் லெனின் சிலை திறக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியான உடன், ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா கட்சியினர் சேர்ந்து அங்கிருந்த லெனின் சிலையை சாய்த்தனர். அப்போது நாங்கள், லெனின் சிலையை தகர்க்கலாம், அவரது சித்தாந்தத்தையும், புரட்சியையும் மக்களிடம் இருந்து அளிக்க முடியாது என்று கூறினோம்.

100 ஆண்டுகள் பழமையான புரட்சியையும், புரட்சியாளரையும் ஏன் தாங்கி பிடிக்கிறீர்கள் என்று சிலர் கேட்டனர். இன்றைய சூழலிலும் சமூகத்தில் சுரண்டல் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பதற்கு லெனின் கொள்கைகள் உதவும்.

மோடி தலைமையிலான மத்திய அரசால் இந்திய மக்களின் நிலைமை மோசமாக்கப்பட்டு வருகிறது. வளமிக்க நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் சிதையும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்தியாவில் உள்ள 19 பெரிய செல்வந்தர்களின் சொத்துகள், நாட்டில் உள்ள 50 சதவீத மக்களின் செல்வத்துக்கு இணையாக உள்ளது. முதலாளிகள் கொள்ளை லாபம் அடையவும், பெரும் பணம் திரட்டவும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது.

இதை தடுக்க தொழிலாளிகள், விவசாயிகள் ஒன்று சேர வேண்டும். ஏற்கனவே டெல்லி, மும்பையில் நடத்திய பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தனிமனிதரான, தனக்கு எதிராக எதிர்கட்சிகள் அணி திரண்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறிஉள்ளார். அது தவறானது ஆகும். ஏனென்றால் மத்திய அரசை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற எதிர்கட்சி தலைவர்களை, மக்களே ஒன்றிணைய வைத்துள்ளனர். நாட்டு மக்களின் வாழ்வு மேம்பட ஆட்சி மாற்றம் அவசியம் ஆகும். மக்கள் நலன் சார்ந்த மாற்று கொள்கைகள் உருவாக வேண்டும். மக்களுக்கு சாதகமான புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். மதசார்பற்ற, ஜனநாயக அமைப்பை உடைக்க பாரதீய ஜனதா உள்ளிட்ட சில சக்திகள் முயற்சி செய்கின்றன. மதரீதியாக பிளவுகளை உருவாக்கி இந்துத்துவத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்தில் தனது கூட்டாளிகளை உருவாக்கி, அவர்கள் மூலம் பாரதீய ஜனதா காலூன்ற முயற்சி செய்கிறது. அதற்கு இடம் கொடுக்க கூடாது. தமிழகத்தில் வேற்றுமையில் ஒற்றுமையையும், சமூக நீதியையும் உருவாக்கியதில் திராவிடத்தின் பங்கு மிகப்பெரியது. அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

இந்தியாவில் இருந்து மோடி அரசையும், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. அரசையும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வாசுகி, நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரகுணன் நன்றி கூறினார்.

முன்னதாக காலையில் கொடியேற்றம், இசை நிகழ்ச்சி, தப்பாட்டம், கருத்தரங்கு, கவியரங்கம், வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Next Story