ஓய்வூதியர்கள் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் - கலெக்டர் ராமன் உத்தரவு


ஓய்வூதியர்கள் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் - கலெக்டர் ராமன் உத்தரவு
x
தினத்தந்தி 23 Jan 2019 4:57 AM IST (Updated: 23 Jan 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியர்கள் மனுக்கள் மீது காலம் கடத்தாமல் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இதில் சென்னை ஓய்வூதிய இயக்ககத்தின் இணை இயக்குனர் மஞ்சுளா, துணை இயக்குனர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு, ஓய்வூதியர்கள் மனுக்கள் மீதான துறை அலுவலர்களின் பதிலறிக்கையை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசுகையில், ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் அரசு ஆணை மற்றும் விதிகளின்படி காலம் கடத்தாமல் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், என்றார்.

மேலும் ஓய்வூதியர் காப்பீடு திட்டத்தின்படி, இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் முழுமையான சிகிச்சை அளிப்பதோடு, காப்பீட்டுத் தொகையை ஓய்வூதியர் கணக்கில் வழங்குவதை உறுதி செய்ய வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர், காப்பீடு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்துத்துறை அளவிலான கூட்டங்களை நடத்தி உடனுக்குடன் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க வேண்டும் என்றும், பதிலறிக்கை அனுப்பி வைக்காத துறை அலுவலர்கள் 2 வாரத்திற்குள் ஓய்வூதியர்கள் மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) நாராயணன், (கணக்குகள்) சிலுப்பன், கருவூல அலுவலர் புஷ்பா, அலுவலக மேலாளர் (பொது) முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story