வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை ஏப்ரலுக்கு பிறகே தொடங்க வாய்ப்பு


வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை ஏப்ரலுக்கு பிறகே தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 11:36 PM GMT (Updated: 22 Jan 2019 11:36 PM GMT)

வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே ஏப்ரல் மாதத்துக்கு பிறகே மோனோ ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

நாட்டிலேயே மும்பையில் தான் மோனோ ரெயில் திட்டம் செம்பூர்- வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே 19.54 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக அமைக்கப்பட்ட செம்பூர்- வடாலா இடையிலான வழித்தடத்தில் மோனோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையிலான 2-வது கட்ட மோனோ ரெயில் வழித்தட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. 2015-ம் ஆண்டே பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இன்னும் இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவையை தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 20 இலக்குகள் தோல்வியில் முடிந்தன.

இந்தநிலையில், வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் போதிய மோனோ ரெயில்கள் இல்லாததன் காரணமாக சேவை தொடங்குவதில் மேலும் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும(எம்.எம்.ஆர்.டி.ஏ.) அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘தற்போது 4 மோனோ ரெயில்கள் தான் இருக்கின்றன. இதில் 3 மோனோ ரெயில்கள் செம்பூர்- வடாலா இடையே இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு மோனோ ரெயில் அவசர தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

செம்பூர்- வடாலா- ஜேக்கப் சர்க்கிள் வரை இருமார்க்கத்திலும் இயக்குவதற்கு கூடுதல் மோனோ ரெயில்கள் தேவைப்படுகிறது. எனவே புதிதாக 10 மோனோ ரெயில்களை வாங்க இருக்கிறோம். இதற்கான ஒப்பந்தபுள்ளி அடுத்த மாதம் கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எனவே வடாலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தான் 2-ம் கட்ட வழித்தடத்தில் மோனோ ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக எம்.எம்.ஆர்.டி.ஏ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story