சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேக்கு நினைவிடம் கட்ட ரூ.100 கோடி மராட்டிய மந்திரி சபை ஒப்புதல்


சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேக்கு நினைவிடம் கட்ட ரூ.100 கோடி மராட்டிய மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 23 Jan 2019 5:28 AM IST (Updated: 23 Jan 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேக்கு மும்பை மேயர் பங்களாவில் நினைவிடம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்க மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தின் முக்கிய அரசியல் சக்தியாக திகழ்ந்தவர், சிவசேனா கட்சி நிறுவனர் பால்தாக்கரே. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி தனது 86-வது வயதில் மரணம் அடைந்தார்.

பால்தாக்கரேக்கு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார்.

இதையடுத்து பால்தாக்கரே நினைவிடம் அமைப்பதற்காக அங்குள்ள மேயர் பங்களா தேர்வு செய்யப்பட்டது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

மேலும் மேயர் பங்களாவில் பால்தாக்கரே நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. எனவே மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் அந்த பங்களாவை காலி செய்துவிட்டு, பைகுல்லாவில் உள்ள மாநகராட்சி பங்களாவில் குடியேறினார்.

பால்தாக்கரே நினைவிடம் 11 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இந்த நிலத்தை உத்தவ் தாக்கரே தலைமையில் நினைவிட பணிகளுக்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) மேயர் பங்களாவில் நடக்கிறது. இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நினைவிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமி பூஜையை நடத்த பிரதமர் மோடியை அழைக்க வேண்டும் என்று சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மராட்டிய மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பால்தாக்கரே நினைவிடம் அமைக்கும் பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இதுபற்றி நிதித்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறுகையில், ‘பால்தாக்கரே சிவசேனாவின் தலைவர் மட்டும் அல்ல. பா.ஜனதா, சிவசேனா கூட்டணிக்கு வித்திட் டவர். அவர் மறைந்தாலும் அனைத்து அரசியல் கட்சி யினர் மத்தியிலும் முக்கியத்துவம் வாய்ந்தவராக தொடர்ந்து விளங்குகிறார். அவரது நினைவிடத்துக்கு ஒதுக்கப்படும் ரூ.100 கோடியை மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் வழங்கும்’ என்றார்.

பால்தாக்கரே நினைவிடம் அமைய உள்ள மேயர் பங்களாவின் ஒரு பகுதி கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் அதனிடம் இருந்தும், பாரம்பரிய கமிட்டியிடம் இருந்தும் அனுமதி பெற வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story