வானவில் : சுவற்றில் ஓவியம் வரையும் ‘ஸ்க்ரிபிட்’


வானவில் : சுவற்றில் ஓவியம் வரையும் ‘ஸ்க்ரிபிட்’
x
தினத்தந்தி 23 Jan 2019 3:15 PM IST (Updated: 23 Jan 2019 3:15 PM IST)
t-max-icont-min-icon

நமது வரவேற்பறையை தினம் ஒரு விதமாக அலங்கரித்துக் கொள்ள யாருக்கு தான் ஆசையிருக்காது? இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நினைக்காதீர்கள். அதை சாத்தியப்படுத்த வந்துள்ளது ‘ஸ்க்ரிபிட்’ என்கிற ரோபோ.

 சக்கர வடிவிலான இந்த ரோபோ நமது சுவரில் படங்களை வரைகிறது. நாம் மாற்ற விரும்புகிறபோது அழித்து விட்டு வேறு படத்தை வரைகிறது.

நாம் இணையத்தில் இருந்து தேர்ந்தெடுக்கும் படங்களை கை தேர்ந்த ஓவியரைப் போல தத்ரூபமாக சுவரில் வரைகிறது. வெள்ளை பலகைகள், கண்ணாடி, பிளாஸ்டர் போர்டுகள் ஆகியவற்றிலும் இது தனது கைவண்ணத்தைக் காட்டும். ஐந்தே நிமிடத்தில் இதனை இன்ஸ்டால் செய்யலாம்.

இரண்டு ஆணி, ஒரு பிளக்கும் இருந்தால் போதும். இதனை சுவரோடு பொருத்திக் கொண்டு வேண்டியபோது உபயோகிக்கலாம். ஆன் செய்தவுடன் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடைந்து இதனுள் இருக்கும் மை மூலம் படம் வரைகிறது.

அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு சக்கரங்களின் துணையுடன் செங்குத்தான எந்த சுவரிலும் ஏறிக்கொள்கிறது. வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல், தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள் என்று எதை வேண்டுமானாலும் சுவற்றில் எழுதிக் கொள்ளலாம். அழித்த சுவடே தெரியாமல் நாள் தோறும் நமது கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு சுவற்றை அலங்கரிக்கலாம். ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினி என்று எதிலும் தொடர்புபடுத்தி இந்த ரோபோவை இயக்கலாம்.

பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் வரையும் இந்த ரோபோ உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு ஆகும்.

Next Story