வானவில் : ஹூண்டாய் நிறுவனத்தின் நடக்கும் கார் “எலிவேட்”


வானவில் : ஹூண்டாய் நிறுவனத்தின் நடக்கும் கார் “எலிவேட்”
x
தினத்தந்தி 23 Jan 2019 5:27 PM IST (Updated: 23 Jan 2019 5:27 PM IST)
t-max-icont-min-icon

கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஏற்ற காரை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘எலிவேட்’ என பெயர் சூட்டியுள்ளது. இந்தக் காரை நடக்கும் கார் என்றும் இந்நிறுவனம் அழைக்கிறது.

சாதாரணமாக கார்களில் சீறிப் பாய்ந்து செல்லத்தான் அனைவரும் விரும்புவர். ஆனால் லாஸ்வேகாஸில் நடைபெற்ற சர்வதேச மின்னணு கண்காட்சியில் (சி.இ.எஸ்) இடம்பெற்ற இந்நிறுவனத்தின் எலிவேட் கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததில் வியப்பில்லை.

இது நான்கு கால்களில் சக்கரத்துடன் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சமதளங்கள் அதாவது தார் சாலைகள் இல்லாத பகுதியிலும் இதில் பயணிக்க முடியும். நான்கு சக்கர கால்களுடன் இது எத்தகைய தளத்திலும் ஏறும், நடக்கும், சமதளத்தில் சீறிப் பாயும் வகையில் உருவாக்கியுள்ளது. இது டிரைவர் உதவியின்றி தானாக செயல்படும் வகையிலும், பேட்டரியில் இயங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாகனமாகும். இதனால் இதுவரை கார்கள் பயணிக்காத வழித் தடத்திலும், அதாவது கரடு முரடான பகுதிகளிலும் இதில் பயணிக்க முடியும். மலைப் பகுதி, காட்டுப் பகுதி உள்ளிட்டவற்றில் இதைப் பயன்படுத்த முடியும். சாலைகளில் பனி படர்ந்து மூடிவிட்டால் இதன் மூலம் நடந்தவாறே பயணித்துச்செல்ல முடியும். இதனை பேரிடர் காலங்களில் மீட்பு வாகனமாகவும் பயன்படுத்த முடியும் என்கிறது ஹூண்டாய்.

பேரிடரில் சிக்கி காயமடைந்தவர்களைக்காப்பாற்றும் வாகனமாக இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதில் உள்ள சிறப்பம்சமாகும். ஐந்து அடி (1.5 மீட்டர்) உயரம் வரை இது ஏறிச்செல்லும். இவ்விதம் ஏறும் போது எவ்வித ஏற்றத் தாழ்வின்றி இதன் கேபின் இருக்கும். இதனால் பயணிப்பவர்களுக்கு எவ்வித அசவுகரியங்களும் ஏற்படாது. இப்போது காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் மிக விரைவிலேயே பன்முக பயன்பாட்டுக்கு புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story