மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 7 இடங்களில் 1,950 பேர் கைது


மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 7 இடங்களில் 1,950 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,950 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் கணிசமானோர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பணியாளர்களின்றி வெறிச்சோடின. பல அரசு அலுவலகங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் இயங்கின. பல அரசு பள்ளிகள் ஆசிரியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் குறைந்த அளவிலான ஆசிரியர்களுடன் செயல்பட்டன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

போராட்டத்தையொட்டி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதன், ரத்தினம், கவுரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநிலத்துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சேகர், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனியம்மாள், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் காமராஜ், மாதேஸ்வரன், கேசவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பகுதிநேர நூலகர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 3,500 பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மறியல் போராட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் பென்னாகரத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் யோகராசு, ஆனந்தன், முருகேசன் ஆகியோர் தலைமையிலும், பாலக்கோட்டில் பழனி, குணசேகரன், ஆனந்தன் ஆகியோர் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. நல்லம்பள்ளியில் கூட்டமைப்பு நிர்வாகி கவிதா, காவேரி ஆகியோர் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாகுபேரன், சண்முகம் ஆகியோர் தலைமையிலும் மறியல் போராட்டம் நடை காரிமங்கலத்தில் புகழேந்தி, நாகராஜ், வைத்தியநாதன், புஷ்பலதா ஆகியோர் தலைமையிலும், அரூரில் கூட்டமைப்பு நிர்வாகிகள் இளவேனில், அழகிரி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 1,950 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story