காவேரிப்பட்டணத்தில் கன்டெய்னர் லாரி கடத்திய 3 பேர் கைது


காவேரிப்பட்டணத்தில் கன்டெய்னர் லாரி கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:00 AM IST (Updated: 23 Jan 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் கன்டெய்னர் லாரி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம்,

மதுரை உசிலம்பட்டியை அடுத்த ஏழுமலை நகரை சேர்ந்த லாரி டிரைவர் பெரியகருப்பு என்பவர் கடந்த 18-ந் தேதி பெங்களூரு அணுகொண்ட அள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 46 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி கொண்டு சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போத்தாபுரம் மேம்பாலத்தின் கீழ் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் டீ சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் பொருட்களுடன் லாரியை கடத்தி சென்றனர். இது குறித்து லாரி உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் குருவிநாயனபள்ளி சோதனைச்சாவடியில் கடத்தப்பட்ட அந்த கன்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், லாரியை கடத்தியது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்த நரேஷ் மற்றும் மது, ஒசகோட்டா பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரியும் மீட்கப்பட்டது. தலைமறைவாக உள்ள சுகாஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story