ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்பறையில் பாடம் நடத்திய மாணவ, மாணவிகள்
போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் பாடம் நடத்தினர்.
சேலம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்ததால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆசிரியர்கள் செல்லாததால் பெரும்பாலான பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு மாணவர்கள் கவனிக்கப் படுகின்றனர். மாவட்டத்தின் கிராம பகுதிகளில் குறைவான ஆசிரியர்களை கொண்ட சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராததால் பள்ளி வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் தாங்களாகவே பாடங்களை படித்து வருகின்றனர். சேலம் சகாதேவபுரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் சக மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இதேபோல் மாவட்டத்தில் சில பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் நடத்தி முடித்த பாடங்களை சக மாணவர்களுக்கு புரியும் வகையில் கரும்பலகையில் எழுதி பாடம் நடத்தியதை பார்க்க முடிந்தது.
ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுடைய பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story