ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் 9 இடங்களில் மறியல்; 2,222 பேர் கைது


ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் 9 இடங்களில் மறியல்; 2,222 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 23 Jan 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரத்து 222 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நேற்று 2-வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 தாலுகா தலை நகரங்களிலும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் பவுல் தலைமையிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சாமிஅய்யா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மறியல் நடைபெற்றது. ராமேசுவரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் புதுராஜா தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜெயசீலன், அரசு ஊழியர் பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கீழக்கரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமு தலைமையிலும், தமிழாசிரியர் சங்க அமைப்பாளர் குமாரவேல், அரசு ஊழியர் பொறுப்பாளர் மணிமொழி ஆகியோர் முன்னிலையிலும் மறியல் நடைபெற்றது.

திருவாடானையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முக துரை தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க வட்டார தலைவர் ஆரோக்கியம் தலைமையில் மறியல் நடைபெற்றது.

முதுகுளத்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் அருள்தாஸ் தலைமையிலும், கடலாடியில் மாவட்ட துணை செயலாளர் இமானுவேல் ஜேம்ஸ் தலைமையிலும், கமுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஆயிரத்து 387 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 222 பேர் கலந்து கொண்டு கைதானதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட வில்லை. அலுவலக பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் பூட்டப்பட்டிருந்தன.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவ- மாணவிகளை கொண்டு பள்ளிகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் பூட்டியே கிடந்தன. இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்வி பாதிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் மட்டுமே இயங்கின.

நேற்று முன்தினம் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 15 ஆயிரத்து 748 பேரில் 4 ஆயிரத்து 285 பேர் மட்டும் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று தெரிவிக்கப்பட்ட தகவலில் 2-ம் நாள் போராட்டத்தில் 387 பேர் விடுமுறையில் உள்ளதாகவும், 5 ஆயிரத்து 911 பேர் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் நாளை விட 2-ம் நாளில் அதிகம் பேர் கலந்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Next Story