ராமேசுவரத்தில் மீட்கப்பட்ட ஒடிசா இளம்பெண் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு


ராமேசுவரத்தில் மீட்கப்பட்ட ஒடிசா இளம்பெண் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 23 Jan 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் கொண்டு வந்து விடப்பட்டு சுற்றிதிரிந்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மீட்கப்பட்ட நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி ஒரு இளம்பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி கொண்டிருந்தார். தகவல் அறிந்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணை மீட்டு விசாரித்தனர். அவர் பேசிய மொழி தெரியாத நிலையில் அவர் குறித்த விவரங்கள் தெரியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரேபாரதி என்பது தெரிந்தது. ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் அழைத்து வந்த நபர்கள் ராமேசுவரத்தில் விட்டுசென்று இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அந்த இளம்பெண் ராமநாதபுரம் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

அந்த இளம்பெண்ணை சமூகநலத்துறை மூலம் சென்னையில் உள்ள பாதிப்புக்குள்ளாகும் பெண்களை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சேவை மையத்தில் இருந்து ரேபாரதி அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Next Story