மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது


மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 11:41 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோஅமைப்பின் சார்பில் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று சிவகங்கை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உயர் கல்வித்துறை, நகர் நிர்வாகத் துறை, அங்கன்வாடி, சத்துணவு, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை வட்டாரத்தின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பஞ்சுராஜ், மைக்கேல்ராஜ், குமார், ராம்குமார், இளமுருகு ஆகியோர் தலைமையில் சிவகங்கை பஸ்நிலையத்திற்கு ஊர்வலமாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அங்கு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரபாகரன், பாண்டியராஜன், சசிகுமார், சுந்தரபாண்டியன், சுரேஷ்கண்ணா, கவிதை கண்ணன், காளிராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, இளங்கோ, பிரபாகரன் மற்றும் 134 பெண்கள் உள்பட 220 பேரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர். காஞ்சிரங்காலில் உள்ள பள்ளி ஒன்று பூட்டப்பட்டு இருந்தது.

இதேபோல் காரைக்குடி புதிய பஸ் நிலையம் நகராட்சி அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ சார்பில் தாலுகா ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெய்சங்கர், சரவணன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 475 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தேவகோட்டையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அழகப்பன், அதிசயராஜ், நாகராஜன், சேவுகமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துபாண்டியன் உள்பட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஈடுட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெரோம்ஆரோக்கியதாஸ், சக்திவேல், மாரி, சதீஷ்குமார் உள்பட 260 பேரை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது கைது செய்தார்.

இளையான்குடி கண்மாய் கரை பகுதியில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் சேதுசெல்வம் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 140 பேரை இளையான்குடி போலீசார் கைது செய்தனர். மானாமதுரை யூனியன் அலுவலகம் எதிரே மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிச்சை தலைமையில் போராட்டம் நடத்திய 144 பெண்கள் உள்பட 236 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.

காளையார்கோவில் பஸ் நிலையம் அருகில் கோவிந்தராஜ், பெஞ்சமின், மற்றும் நாகராஜ் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்திய 153 பெண்கள் உள்பட 253 பேரை போலீசார் கைது செய்தனர். சிங்கம்புணரியில் திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 191பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் எதிரே ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக வட்டார ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன், முத்துமாரியப்பன், மீனாட்சிசுந்தரம், முத்துப்பாண்டி, மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் சிங்கராயர், பழனியப்பன், கருப்பையா, ஜெகன், மகாலிங்க ஜெயகாந்தன் உள்பட 229 பேரை திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை மற்றும் போலீசார் கைது செய்தனர். 

Next Story