தொழில் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த பேட்டரி கார் - மோட்டார் சைக்கிள்


தொழில் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த பேட்டரி கார் - மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 24 Jan 2019 3:30 AM IST (Updated: 24 Jan 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழில் கண்காட்சியில் பேட்டரி கார் - மோட்டார் சைக்கிள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சென்னை, 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கிய 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக தொழில் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்த 110 அரங்கங்களும், பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த 140 அரங்கங்களும் என 250 அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக, இந்த கண்காட்சியில் இடம்பெற்ற பேட்டரி கார், பேட்டரி மோட்டார் சைக்கிள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பேட்டரி காரை ஹூண்டாய் கார் நிறுவனம் வடிவமைத்திருந்தது. கோனா என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த பேட்டரி கார் 64 கிலோ வாட் திறன் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட பேட்டரியை கொண்டது. காரின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்ய 39 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. காருடன் பேட்டரி சார்ஜரும் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜர் மூலம் வீட்டிலேயே காருக்கு சார்ஜ் செய்ய முடியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இடைவிடாமல் 345 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். எந்தவித சப்தம் இல்லாமல் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தக் காரை, புறப்பட்ட 7 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேட்டரி காருக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரி காரை ஹூண்டாய் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் விரைவில் தயாரிக்க இருக்கிறது. அதற்காக, ரூ.7 ஆயிரம் கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. அதற்கான ஒப்பந்தம் இன்றைய மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் கையெழுத்தாக இருக்கிறது.

இதேபோல், கண்காட்சியில் பேட்டரி மோட்டார் சைக்கிள் இடம் பெற்றிருந்தது. பிளாக் ஸ்மித் என்ற பெயரில் இடம் பெற்றிருந்த பேட்டரி மோட்டார் சைக்கிளை சென்னை அசோக்நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞர் வடிவமைத்துள்ளார். 2013-ம் ஆண்டில் இருந்தே இதற்கான முயற்சியில் இறங்கிய அவர், தற்போது வெற்றிகரமாக மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.

கண்காட்சியை பார்வையிட வந்தவர்களையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று அசத்தினார். இதுகுறித்து, கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறும்போது, பேட்டரி மோட்டார் சைக்கிளின் மொத்த நீளம் 6 அடி. விலை ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். 8 கிலோ வாட் பேட்டரி இதில் உள்ளது. ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரம் செல்ல முடியும். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். இதற்கு தனியாக பேட்டரி சார்ஜர் கிடையாது. இப்போது இருக்கும் பெட்ரோல் பங்குகளைப் போல், பேட்டரி சார்ஜ் செய்வதற்காக தனியாக இடம் இருக்கும். அங்கு சென்று காலியான பேட்டரியை கொடுத்துவிட்டு, ரூ.60 கட்டணத்தில் சார்ஜ் செய்த பேட்டரியை வாங்கிச்செல்ல முடியும் என்றார்.

Next Story