சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடை இல்லை எதிரான வழக்கு, ஐகோர்ட்டில் தள்ளுபடி
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க தடை இல்லை. நினைவிடத்துக்கு எதிரான வழக்கு, ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை,
மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் அவருக்கு ரூ.50.80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர். அவருக்கு பொதுமக்களிடம் இருந்து வரியாக வசூலிக்கப்பட்ட பணத்தை கொண்டு நினைவிடம் கட்ட அனுமதிக்கக்கூடாது. அவருக்கு நினைவிடம் கட்டினால், அது தவறான முன் உதாரணமாக மாறிவிடும். எனவே, இதற்கு தடை விதிப்பதுடன், இதுவரை செலவு செய்த தொகையை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
அதில் கூறி இருந்ததாவது:-
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இது அதிகார வரம்புக்குட்பட்ட ஒன்றுதான். மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலோ, சட்டவிரோதமோ இல்லை.
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான தண்டனை கைவிடப்பட்டது. எனவே அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி எனக் கருத முடியாது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. அதுபோல இந்த வழக்கையும் தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர். எனவே மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடை இல்லை.
தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு இருப்பதாவது:-
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டு அவருக்கு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நிலுவையில் இருக்கும்போதே, ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். அதனால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு கைவிடப்பட்டது.
அதனால், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு இருக்கும்வரை, கர்நாடக ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்ததுதான் நிலுவையில் இருந்தது. எனவே, அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது.
மக்களின் வரிப்பணத்தை கொண்டு நினைவிடம் கட்டக்கூடாது என்று வழக்குதாரர் கூறினாலும், இந்த நிதியை ஒதுக்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்க்கவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
மேலும், கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம், தலைவர்களின் நினைவாக தரமான ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story