ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் கிணற்றில் மூழ்கி தாத்தா-பேத்தி பலி


ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் கிணற்றில் மூழ்கி தாத்தா-பேத்தி பலி
x
தினத்தந்தி 24 Jan 2019 4:45 AM IST (Updated: 24 Jan 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் மூழ்கி தாத்தா-பேத்தி பரிதாபமாக இறந்தனர்.

சத்திரப்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55). விவசாயி. இவருடைய பேத்தி ராஜஹர்ஷினி (2). நேற்று இவர், தனது பேத்தியை தூக்கிக்கொண்டு தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். பின்னர் தோட்ட பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் பேத்தியை அமர வைத்துவிட்டு, மின்மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் அறைக்குள் சென்றார்.

அப்போது, கிணற்றின் அருகே இருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி ஓடி வந்து குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். அப்போது கிணற்றின் சுவரில் மோதியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் தனது பேத்தியை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

இதற்கிடையே அந்த வழியாக சென்றவர்கள், குழந்தையுடன் வேலுச்சாமி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் கிணற்றுக்குள் குதித்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலுச்சாமியை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

மேலும் இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பொதுமக்களுடன் சேர்ந்து வேலுச்சாமியை தீயணைப்பு படையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர், மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவருடைய உடல் மீட்கப்பட்டது.

இதற்கிடையே ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி தாத்தாவும், பேத்தியும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story