வடக்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நடிகர் கிருஷ்ணா அபிஷேக் விருப்பம்
வடக்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நடிகர் கிருஷ்ணா அபிஷேக் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் மும்பையில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மிலிந்த் தியோரா, பிரியா தத், ஏக்நாத் கெய்க்வாட், குருதாஸ் காமத், சஞ்சய் நிருபம் ஆகிய அனைவரும் தோல்வியை தழுவினர்.
எனவே இந்த முறை மும்பையில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்காக வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில், வடக்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இந்தி நடிகர் கோவிந்தாவின் உறவினரும், நடிகருமான கிருஷ்ணா அபிஷேக் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமை சந்தித்து பேசினார். அவரை அந்த தொகுதியில் களம் இறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வடக்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில் 2004-ம் ஆண்டு நடிகர் கோவிந்தா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கோவிந்தாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
அப்போது, அந்த தொகுதியில் இருந்து சஞ்சய் நிருபம் நாடாளுமன்றத்துக்கு தேர்வானார். ஆனால் கடந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். நடைபெற உள்ள தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் நடிகர் கிருஷ்ணா அபிஷேக் காங்கிரசின் வலுவான வேட்பாளராக இருப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story