சுருளி அருவியில் நுழைவு கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்
சுருளி அருவியில் வாகன நுழைவு கட்டணம் பெறுவதில் முறைகேடு நடப்பதாக கூறி வசூல் மையத்தை பக்தர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவி பிரசித்தி பெற்றது. இந்த அருவியில் புனித நீராடுவதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் அருவியில் குளித்து விட்டு சுருளிவேலப்பர் கோவில், ஆதிஅண்ணாமலையார் கோவில், சுருளிமலை அய்யப்பசாமி கோவில், பூதநாராயணன் கோவில் மற்றும் கைலாயநாதர் குகை ஆகிய இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுருளி அருவிக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10, கார், பஸ் மற்றும் லாரி போன்ற வாகனங்களுக்கு ரூ.60 கட்டணமாக பெறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் சுருளி அருவிக்கு கம்பம் அருகேயுள்ள அணைப்பட்டியை சேர்ந்த பழனி பாதயாத்திரை முருக பக்தர்கள் குழுவினர் 30 இருசக்கர வாகனங்களிலும், அந்த குழுவை சேர்ந்த பெண்கள் ஒரு லாரியிலும் சென்றனர். அவர்களிடம் வாகன நுழைவு கட்டணம் பெறப்பட்டது. அப்போது ரசீதில் நேற்று முன்தினம் தேதி அச்சிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வாகன கட்டணம் வசூல் செய்யும் மையத்தை பக்தர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் ரசீது தேதியை மாற்றி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் வசூல் மையத்தில் இருந்த ஊழியர்கள் எந்திரத்தின் மூலம் ரசீது வழங்குவதால் அதில் மாற்றி தர முடியாது என்று கூறினர். கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக ஊராட்சி நிர்வாகத்திடம் பக்தர்கள் புகார் தெரிவிப்போம் என்று முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அதற்கு பிறகு வந்தவர்களிடம் வழங்கப்பட்ட நுழைவு கட்டண ரசீதில் நேற்று தேதி அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story