சாலை மறியல் போராட்டம்: அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 1,727 பேர் கைது


சாலை மறியல் போராட்டம்: அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 1,727 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 9:00 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,727 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கம் முன்பு ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினனார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மறியலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசு ஊழியர்கள் பாளையங்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 130 பெண்கள் உள்பட 241 பேரை கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. சிலை முன்பு இருந்து பேரணியாக புறப்பட்டு தேரடி திடலை வந்தடைந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் சங்க வட்டார தலைவர் கணேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து அங்கு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் மறியலில் ஈடுபட்ட 133 பேரை கைது செய்தார்.

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் சுப்பிரமணியன், சுடலைமுத்து, கணேசன், அந்தோணி, சின்னத்துரை, முருகன், ராமமூர்த்தி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 364 பெண்கள் உள்பட 497 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன் (மேற்கு), ஆவுடையப்பன் (கிழக்கு பொறுப்பு), ஜூடி (நாலாட்டின்புத்தூர்) மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசினார். பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் குரூஸ் விக்பர்ட், மகேசுவரன், சுடலை, கிளாட்வின், அருள், தியாகராஜன், சேகர், வலன்டீன் இளங்கோ, கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 206 பெண்கள் உள்பட 305 பேரை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீனா (திருச்செந்தூர் தாலுகா பொறுப்பு), ஷீஜா ராணி (கோவில்) மற்றும் போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பிருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 184 பெண்கள் உள்பட 241 பேரை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பிருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, பழைய பஸ் நிறுத்தம் காமராஜர் சிலை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் பொன் சேகர், அருள்ராஜ், அந்தோணி சார்லஸ், சுவாமிநாதன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 207 பேரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 74 பெண்கள் உள்பட 103 பேரை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,727 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story