கம்மாபுரம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


கம்மாபுரம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2019 11:34 PM GMT (Updated: 23 Jan 2019 11:34 PM GMT)

கம்மாபுரம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்மாபுரம், 

கம்மாபுரம் அடுத்த இருப்பு கிராமத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையின் விற்பனையாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் செடுத்தான்குப்பம், முதனை, நாச்சி வெள்ளையன் குப்பம் ஆகிய ரேஷன் கடைகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கியது.

இருப்பு உள்ளிட்ட 4 ரேஷன் கடைகளை ஒரே விற்பனையாளர் கவனித்து வந்ததாலும், விற்பனை முனை எந்திரம் பழுதடைந்ததாலும், இருப்பு கிராமத்தில் 43 குடும்ப அட்டைதாரர்களுக்கும், செடுத்தான் குப்பம் கிராமத்தில் 22 குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதனை கிராமத்தில் 53 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் விற்பனையாளர் ரமேஷ் இருப்பு ரேஷன் கடைக்கு வந்தார். அப்போது பொங்கல் பரிசு விடுபட்ட இருப்பு கிராமத்தை சேர்ந்த 43 குடும்ப அட்டைதாரர்கள், செடுத்தான் குப்பம் கிராமத்தை சேர்ந்த 22 குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையுடன் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொங்கல் பரிசு வழங்கினால் தான் இங்கிருந்து செல்வோம் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிதம்பரம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story