விவசாயி, நண்பர் வெட்டிக்கொலை மகன் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்


விவசாயி, நண்பர் வெட்டிக்கொலை மகன் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே விவசாயியும், அவரது நண்பரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த தொடர்பாக விவசாயியின் மகன் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழசெவல் நயினார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி (வயது 47), விவசாயி. இவருடைய மனைவி செல்வி (40). இவர்களுக்கு அம்மையப்பன் (22), மகராஜன் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக செல்லக்குட்டி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். செல்வியுடன், 2 மகன்களும் வசித்து வருகின்றனர். கணவன், மனைவியை சேர்த்து வைக்க உறவினர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

செல்லக்குட்டி, அதே ஊரை சேர்ந்த நண்பர் வேல்சாமி (40) என்பவருடன் சேர்ந்து தினமும் மது குடித்து வந்ததார். செல்லக்குட்டி தங்களது தாய் செல்வியுடன் சேர்ந்து வாழாததற்கு வேல்சாமிதான் காரணம் என்று மகன்கள் அம்மையப்பன், மகராஜன் ஆகியோரும், உறவினர்களும் எண்ணி வந்தனர்.

மது குடிப்பதை கைவிடக்கோரி வேல்சாமியிடமும், செல்லக்குட்டியிடம் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் மது குடிப்பதை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேரும் மது குடிக்க ஊருக்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். இதையறிந்த செல்லக்குட்டியின் மகன்கள் மற்றும் உறவினர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு சென்றார்கள்.

அவர்களை பார்த்ததும் செல்லக்குட்டியும், வேல்சாமியும் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். ஆனால், 2 பேரையும் ஓட, ஓட விரட்டி சென்று அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் செல்லக்குட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். வேல்சாமி படுகாயத்துடன் சாலை அருகே மயங்கி விழுந்தார். அதன் பிறகு செல்லக்குட்டியின் மகன்களும், உறவினர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வேல்சாமியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேல்சாமி சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த இரட்டைக்கொலை குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக செல்லக்குட்டியின் மகன் மகராஜன், அவரது உறவினர் மாடக்கண்ணு (69) ஆகியோர் நெல்லை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story