பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணின் இதயத்தில் இருந்த கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணின் இதயத்தில் இருந்த கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்த வெட்டும்பெருமாள் என்பவருடைய மனைவி ஞானசெல்வம் (வயது 58). இவருக்கு கடந்த 3 மாதங்களாக மூச்சுதிணறல் இருந்தது. அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அப்படியிருந்தும் மூச்சு திணறல் குணமாகவில்லை. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது, இதயத்தில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஞானசெல்வத்தின் இதயத்தில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் காசிராஜன் (11). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். காசிராஜனுக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. அவன் கடந்த மாதம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓட்டை அடைக்கப்பட்டது.
இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டீன் கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்பையை சேர்ந்த ஞானசெல்வம் மூச்சுதிணறல் காரணமாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் இதயத்தில் கட்டி இருப்பது தெரியவந்தது. அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தோம்.
இருதய அறுவை சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் மார்வின் மனோ பாய்ல்ஸ் தலைமையில் அருள் விஜய்குமார், மயக்க மருந்து டாக்டர்கள் அமுதா ராணி, விஜய ஆனந்த், முத்துசாமி, முத்துராஜ், ஞானவேல் ராஜன், செண்பகராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். அவருடைய இதயத்தில் இருந்த 100 கிராம் கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
அதேபோல் சிறுவன் காசிராஜனுக்கு பிறவியில் இருந்தே இதயத்தில் சிறிய அளவு ஓட்டை இருந்தது. அவனுக்கும் அரசு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, அந்த ஓட்டையை நவீன சிகிச்சை மூலம் அடைத்துள்ளனர். இதுபோன்ற சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால், ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
அவர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 12 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் புதிதாக அனைத்து வசதிகளும் கொண்ட நவீன மருத்துவமனை ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டன. 90 சதவீத உபகரணங்கள் வந்து விட்டன. திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் ஆஸ்பத்திரி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ரேவதிபாலன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஞானசெல்வம், மாணவன் காசிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story