பாளையங்கோட்டையில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2019 5:49 AM IST (Updated: 24 Jan 2019 5:49 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர் பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் துணைதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெல்லை-தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தலைவர் விக்டர் துரைராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார்.

இந்தியன் வங்கியில் பல ஆண்டுகள் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊழியர்கள் இடமாற்றம் குறித்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தகுந்த ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் பிப்ரவரி 15-ந் தேதி முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கூறப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் பொன்னுதுரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் சரவணன், சிவா, லிஸ்பன்போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story