ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் ரூ.2¼ லட்சத்துக்கு விலை பேசப்பட்ட பஞ்சாப் எருமை மாடு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பஞ்சாப் எருமை மாடு ஒன்று ரூ.2¼ லட்சத்துக்கு விலை பேசப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 200 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.
நேற்று வழக்கமாக சந்தை கூடியது. இதற்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். 450 பசு மாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 750 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
மேலும் ஈரோடு செட்டிபாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வாங்கி வந்த முர்ரே இன எருமை மாடு ஒன்றையும் நேற்று கருங்கல்பாளையம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தார்.
இந்த மாடு சாதாரண எருமை மாட்டைவிட 2 மடங்கு பெரியதாக இருந்தது. சாதாரண எருமை மாடு நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் பால் கொடுக்கும். ஆனால் இந்த முர்ரே இன பசு மாடு நாள் ஒன்றுக்கு 24 லிட்டர் பால் கறக்குமாம். இதன் விலை ரூ.2¼ லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ரூ.1½ லட்சம் வரை விலை கொடுத்து வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் மாட்டின் உரிமையாளர் அதை விற்பனை செய்யாமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.
இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.36 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கறவை மாட்டுக்கான வங்கிக்கடன் உதவி பெற்ற 120 பேர் தங்கள் பகுதி கால்நடை டாக்டர்களுடன் கருங்கல்பாளையம் சந்தைக்கு வந்து தங்களுக்கு பிடித்த மாடுகளை தேர்வு செய்து வாங்கிச்சென்றனர். மேலும் கேரளா, ஆந்திரா, கோவா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான வியாபாரிகள் மாடுகளை விலைபேசி பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.
Related Tags :
Next Story