ஆர்.கே.பேட்டையில் பள்ளியை திறக்கக்கோரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஆர்.கே.பேட்டையில் பள்ளியை திறக்கக்கோரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:00 AM IST (Updated: 24 Jan 2019 10:21 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டையில் பள்ளியை திறக்கக்கோரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வி.புதூர் என்கிற விளக்கணாம்பூடி புதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 3 நாட்களாக இந்த பள்ளி திறக்கப்படவில்லை. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி திறக்காததை கண்டு ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர்.

இந்த பள்ளி மாணவர்கள் நேற்று காலையில் பள்ளிக்கு சென்றனர். பள்ளி திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்ற மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அவர்கள் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை கிராமத்திற்கு நடந்து சென்றனர். அங்கு திருத்தணி-சோளிங்கர் பிரதான சாலையில் புத்தக பையுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ஆர்.கே.பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோட்டீஸ்வரன் அங்கு சென்றார். பள்ளியை திறக்க அவர் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story