எத்தனை கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
எத்தனை கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி கிருஷ்ணன் திடலில் அ.தி.மு.க. சார்பில், எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரத்தினராஜா தலைமை தாங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமரை உருவாக்கிய சக்தி படைத்தவர். அவரது உதவியால்தான் பா.ஜ.க. இந்தியாவில் ஆட்சி அமைக்க முடிந்தது. மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வாரி வழங்கியவர் ஜெயலலிதா. அவருக்காகவும், இரட்டை இலை சின்னத்துக்காகவும்தான் மக்கள் வாக்களித்தனர். அதனால்தான் அ.தி.மு.க. தனித்து நின்றாலும் மகத்தான வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவதற்கு யாரும் பிறக்கவில்லை.
தி.மு.க. கட்சியின் கிளை கூட்டத்தை நடத்தி விட்டு, கிராம சபை கூட்டம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே என்று பேசுகிறார். இது அங்குள்ளவர்களுக்கு புரியுமா?.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளார். அதில் தீர்ப்பு எப்படி வந்தாலும் பரவாயில்லை. அவர் மீண்டும் போட்டியிடக்கூடிய சூழ்நிலை வந்தால், போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக வருவார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறி உள்ளார்.
சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்று எந்த தேர்தல் வந்தாலும், எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், நிலவள வங்கி தலைவர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story