மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை


மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.

குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகிறது. மேற்கண்ட காய்கறிகள் நன்கு விளைந்து, அதிக மகசூல் தர நீர்பாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மலைக்காய்கறிகளில் கேரட் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. குன்னூர் தாலுகாவில் கேத்தி பாலாடா, கொல்லிமலை, அதிகரட்டி, கோனானிமட்டம் போன்ற பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு உள்ளது.

இங்கு அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் மூட்டைகளாக லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இதனால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி ஹரி கூறியதாவது:-

கேரட் பயிரை பெரும்பாலான சிறு விவசாயிகள் பயிரிடுகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கேரட் சீசன் காலமாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடைத்தது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை மட்டுமே கிடைக்கிறது. ஒரு கிலோ கேரட்டுக்கு சாகுபடி செலவு, லாரி வாடகை, தொழிலாளர் கூலி ஆகியவற்றுக்கே ரூ.15 வரை செலவாகிறது.

இதனால் தற்போது கிடைக்கும் விலை கட்டுப்படியாகவில்லை. மைசூரு, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்தும் கேரட் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நீலகிரி கேரட் தேவை குறைந்து உள்ளது. இதே நிலை நீடித்தால், நீலகிரி கேரட் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில், விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story