அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளிக்கு ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சை கோவில்பட்டி டாக்டர்கள் சாதனை


அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளிக்கு ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சை கோவில்பட்டி டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 25 Jan 2019 2:45 AM IST (Updated: 24 Jan 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளிக்கு ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

கோவில்பட்டி, 

எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் மாயக்கண்ணன் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் கடந்த 7-12-2018 அன்று தனது மோட்டார் சைக்கிளில் இளம்புவனம் விலக்கில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி மாயக்கண்ணன் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ்சின் சக்கரம், அவருடைய வலது கால் பாதத்தில் ஏறி இறங்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேசமயம் வலது கால் பாதத்தில் இருந்த ரத்த நாளங்கள் சிதைந்ததால், அவருக்கு ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் மேற்பார்வையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் டாக்டர் இளங்கோ உள்ளிட்ட குழுவினர் நேற்று மாயக்கண்ணனுக்கு ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அவருடைய தொடையில் இருந்த நுண்ணிய ரத்த நாளத்தை சதையுடன் எடுத்து, அதனை காலில் சிதைந்த பகுதியில் மைக்ரோஸ்கோப் உதவியுடன் துல்லியமாக பொருத்தினர்.

இந்த அறுவை சிகிச்சை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடந்தது. அவருடைய வலது காலில் புதிதாக இணைக்கப்பட்ட ரத்த நாளம் வழியாக ரத்தம் சீராக செல்வதால், சில நாட்களில் அவர் பூரண நலம் அடைவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கூறியதாவது:- நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில்கூட ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சை செய்தது கிடையாது. தற்போது கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.5 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தநாள மாற்று அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story