ராசிபுரம் பகுதியில் ரூ.75 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


ராசிபுரம் பகுதியில் ரூ.75 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

ராசிபுரம்,

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கபுரம், கூனவேலம்பட்டி, முத்துக்காளிப்பட்டி, சிங்காளந்தபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் குருக்கபுரம் ஊராட்சியில் கால்நடை வளர்க்கும் ரங்கசாமி மற்றும் சுந்தரம்மாள் ஆகியோரது நிலத்தில் தலா ரூ.15,000 மதிப்பீட்டில் தீவன வளர்ப்பு தொட்டி அமைத்து அசோலா தீவனம் வளர்க்கப்பட்டுள்ளதையும், ரூ.20,000 மதிப்பீட்டில் செல்லியம்மன் கோவில் அருகில் கால்நடைகள் நீர் அருந்தும் தொட்டி அமைக்கப்பட்டுள்ள பணியினையும், ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், குருக்கபுரம் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொண்டப்பன் என்பவரது வீட்டினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கூனவேலம்பட்டி ஊராட்சியில் ரூ.24.40 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி - சேலம் சாலை முதல் அணைக்கட்டிபாளையம் சாலை வரை தார்சாலை மேம்பாடு செய்யப்பட்டுள்ள பணியினையும், முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் ரூ.8.02 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், சிங்காளந்தபுரம் ஊராட்சியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - ராசிபுரம் சாலைகள் வழியே பள்ளர் காளியம்மன்கோவில் சாலை மேம்படுத்தப்பட்டுள்ள பணியினையும், ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் சந்தைபேட்டை கணபதி நகர் பகுதியில் தங்கவேல் முதலியார் சாலை முதல் குப்புசாமி வீடு வரை பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினையும் என மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தனபால் உள்பட பணி மேற்பார்வையாளர்கள் உடன் சென்றனர்.

Next Story