தேனியில் 2-வது நாளாக சாலை மறியல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2,118 பேர் கைது


தேனியில் 2-வது நாளாக சாலை மறியல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2,118 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 25 Jan 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் செய்தனர். 2,118 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் முதல் நாளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2-வது நாளாக நேற்று முன்தினம் சாலை மறியல் செய்தனர்.

3-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 541 பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 37 சதவீதம் ஆகும்.

அதிகபட்சமாக கல்வித்துறையில் 4 ஆயிரத்து 10 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் ஏராளமான பள்ளிகள் ஆசிரியர்கள் வருகை இன்றி மூடப்பட்டன. சில பள்ளிகளில் அருகில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் தற்காலிகமாக வகுப்புகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் வகுப்புகள் நடத்த முடியவில்லை. இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களும் தொடர்ந்து 3-வது நாளாக வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போலீஸ் துறை அமைச்சுப் பணியாளர்களும் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். மாவட்டத்தில் அமைச்சுப் பணியாளர்கள் 60 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 53 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு போலீஸ் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

சாலை மறியல்

அதேபோல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேனியில் 2-வது நாளாக சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். இதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழனிசெட்டிபட்டியில் திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் திரண்டு நின்றதால் தேனி-கம்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதையடுத்து அங்கிருந்து தேனி நேரு சிலை சிக்னல் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனால் தேனியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஊர்வலத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். பின்னர் நேரு சிலை சிக்னல் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட 1,493 பெண்கள் உள்பட மொத்தம் 2,118 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் பஸ்கள், வேன்கள், அரசு டவுண் பஸ்கள், தனியார் பஸ்கள், மினிபஸ்கள் என 35-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் ஏற்றிச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா தலைமையில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். இருப்பினும் ஊர்வலம், மறியல் காரணமாக 1 மணி நேரத்துக்கும் மேலாக தேனியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story