மாணவர்களின் எதிர்காலம் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்


மாணவர்களின் எதிர்காலம் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Jan 2019 3:45 AM IST (Updated: 25 Jan 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் எதிர்காலம் கருதி சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி, 

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரி புதுவை சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் கடந்த 18-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இந்தநிலையில் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை சட்டசபையில் அவரது அலுவலகத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில், சங்கர் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து இதுகுறித்து பேசினார்கள்.

இந்தநிலையில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து கேபினட் அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு கொறடா அனந்தராமன், பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ., முதல்-அமைச்சரின் செயலாளர் பார்த்திபன், உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து வருகிற 27-ந்தேதி கல்வி அமைச்சர், தலைமை செயலாளர், துறை செயலாளருடன் கலந்து ஆலோசித்து சுமூக தீர்வு காணப்படும் என்று நாராயணசாமி உறுதி அளித்தார். மாணவர்களின் எதிர்காலம் கருதி உடனடியாக பணிக்கு திரும்புமாறு ஆசிரியர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்பின் ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Next Story