மதுரையில் பரபரப்பு போலீஸ் விசாரணைக்கு சென்ற சிறுவன் மர்ம சாவு


மதுரையில் பரபரப்பு போலீஸ் விசாரணைக்கு சென்ற சிறுவன் மர்ம சாவு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை, 

மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்தவர் மோகன், சுமை தூக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி ஜெயா. பூ வியாபாரியான இவர் அ.ம.மு.க. மகளிரணி பகுதி இணைச் செயலாளராகவும் உள்ளார். இவர்களது மகன் முத்து கார்த்திக் (வயது 16), கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை விசாரணைக் காக எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கிருந்து முத்து கார்த்திக் செல்போன் மூலம் தனது தாயாருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முத்து கார்த்திக் இருந்தார். இதை பார்த்த அவர்கள் தங்களது மகனை போலீசார் தாக்கியதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். பின்னர் முத்து கார்த்திக்கை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முத்து கார்த்திக் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் முத்து கார்த்திக் இறந்த சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். போலீசார் தாக்கியதில்தான் தனது மகன் முத்துகார்த்திக் இறந்து விட்டதாக அழுது கொண்டே ஜெயா அவர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து உறவினர்கள் போலீசாரை கண்டித்து, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் மறியல் செய்த 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் முத்துகார்த்திக் உடல் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்லப்பட்டது. அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை முத்து கார்த்திக் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story