திருச்சி அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: சுற்றுலா வந்த 20 மாணவ-மாணவிகள் படுகாயம்


திருச்சி அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: சுற்றுலா வந்த 20 மாணவ-மாணவிகள் படுகாயம்
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே ஆம்னி பஸ்கள் மோதிக் கொண்டதில் சுற்றுலா வந்த 20 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்னி பஸ்சில் சுற்றுலா புறப்பட்டனர். அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் மற்றும் டிரைவர், சமையல்காரர் என 55 பேர் பயணம் செய்தனர். பஸ்சை கடப்பா மாவட்டம், புரிவேந்தலா தாலுகா, மங்களா காலனியை சேர்ந்த சிலாஸ் (வயது 29) என்பவர் ஓட்டினார். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்ற அவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆந்திரா நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இந்த பஸ்சுக்கு முன்னால் தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி மற்றொரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அதில், 48 பயணிகள் இருந்தனர். உத்தமப்பாளையம் தாலுகா, சாமிகுளம் 3-வது தெருவை சேர்ந்த அன்வர்பாட்ஷா (57) என்பவர் பஸ்சை ஓட்டினார்.

திருச்சி நெ.1 டோல்கேட் மாருதி நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஆம்னி பஸ்சின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால், பஸ்சின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் 20 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story