வேடசந்தூரில் இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்ட 5 பேர் கைது


வேடசந்தூரில் இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்ட 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 10:45 PM GMT (Updated: 24 Jan 2019 8:19 PM GMT)

வேடசந்தூரில், இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், இந்து முன்னணியின் மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார். சமீபத்தில் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் தீவிரமாக பேசி வந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் திண்டுக்கல்லில் நடந்த வாகன தணிக்கையின்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுடன் இந்திய தேசிய லீக் கட்சி பிரமுகர் அல் ஆசிக் என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை, முகநூலில் மாரிமுத்து பதிவிட்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் வேடசந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வேடசந்தூரில், மாரம்பாடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, 2 பட்டா கத்திகள் இருப்பது தெரியவந்தது. அந்த கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வேடசந்தூர் சாலைத்தெருவை சேர்ந்த வெள்ளுர்பாவா (வயது 23), சேக் அப்துல்லா(19), யூசுப்நகரை சேர்ந்த சேக்பரீத் (20), சீனிராவுத்தர் தெருவை சேர்ந்த முகமது யூசுப்கான் (19), வசந்தநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (20) என்று தெரியவந்தது.

மேலும் அவர்கள், இந்து முன்னணி மேற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்துவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கும் அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த இந்திய தேசிய லீக் கட்சி பிரமுகர் அல் ஆசிக் மற்றும் இபுராகீம் (22) ஆகியோரை தேடி வருகின்றனர். இதற்கிடையே கைதான 5 பேரும் வேடசந்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முத்து இசக்கி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அவர்கள் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story