பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே வகுத்தான்விளையை சேர்ந்தவர் ராஜா, காங்கிரஸ் பிரமுகர். இவருடைய மகன் பொன் ஷோஜின் ராஜ். இவர் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஆசிரியை பெனிற்றா என்பவருக்கும் திக்கணங்கோடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் திருமணம் நடந்தது. பின்னர் புதுமண தம்பதி கருங்கல் பகுதியில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

மாலையில் கருமாவிளையில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன் கேரள ஆண், பெண் கலைஞர்கள் சார்பில் சிங்காரி மேளம் முழங்கியது. மணமக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்ததை கண்ட பொதுமக்கள் அதனை வியப்புடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து மணமகனின் தந்தை ராஜா கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியது போல மாட்டு வண்டியில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். அதனை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மணமக்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாட்டு வண்டியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம்” என்றார்.

Next Story