பிரதமர் மோடி 10-ந் தேதி திருப்பூர் வருகை பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்
திருப்பூரில் வருகிற 10-ந் தேதி நடைபெறும் பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்று கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார். பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர்,
வருகிற 27-ந் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அடுத்தகட்டமாக மேற்கு தமிழகத்தில் திருப்பூரில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதன் மூலமாக பா.ஜனதா கட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய தேர்தல் பணிகளை விரைவாக தொடங்குவதற்கும், தேர்தல் களத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் அந்த கூட்டம் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
திருப்பூரில் நடக்கும் கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, கோவை, கரூர் நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். அரசின் திட்டங்கள் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடியுடன் பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர்கள், தமிழக பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள்.
மேற்கு தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில், ஏற்கனவே பா.ஜனதாவுக்கு அதிகம் வெற்றி வாய்ப்பை கொடுத்த தொகுதிகள் இருக்கின்றன. இதற்கு முன்பு கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதாவினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அதிகமான வாக்குகள் பெற்ற பகுதியாக இருக்கிறது. பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களும் அதிகமான வாக்குகளை பெற்ற தொகுதிகளாக இவை உள்ளன.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக இந்த பகுதிகளில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக பா.ஜனதா கட்சி கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரதமரின் வருகை பா.ஜனதாவுக்கு அதிகபலத்தை கொடுத்து வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் தலைமை தகுந்த நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கும். நாட்டை ஆளும் கட்சி என்பதால் பா.ஜனதா முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. அனைத்து நாடாளுமன்ற தொகுதியும் எங்களுக்கு முக்கியம். நாடு முழுக்க பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார். அவருடைய இரட்டை நிலைபாட்டை மக்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். தமிழகத்தில் வைத்து பிரதம வேட்பாளர் ராகுல் என்கிறார். ஆனால் மேற்கு வங்கத்துக்கு சென்றபோது பிரதம வேட்பாளரை அவர் மறந்து விடுகிறார். வெறும் ‘மோடி ஒழிக’ என்ற கோஷத்தை வைத்து ஜெயிக்க முடியாது. அவர்கள் மாற்று திட்டத்தை அறிவிக்கவில்லை. அனைவரும் கை தூக்கி ‘ஒழிக’ என்று கோஷம் போடுவதற்கு இந்த நாட்டில் ஒரு கூட்டணி அவசியமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
பிரதமர் வருகை பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு புத்துயிர் கொடுக்கும். அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் முழு வேகத்தில் பா.ஜனதாவினர் தேர்தல் பணியாற்ற தொடங்குவார்கள். அரசியல் மாற்றத்துக்கான வேலையை பா.ஜனதா செய்து வருகிறது. தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் மாற்றம் வரும். பா.ஜனதா இருக்கும் கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுபவர்களுக்கு மக்கள் கருப்புக்கொடி காட்டி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பிரதமர் மோடி திருப்பூர் வருகை தொடர்பாக பா.ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இதில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகமூர்த்தி, செயலாளர்கள் நந்தகுமார், சரஸ்வதி, துணை தலைவர் சிவகாமி, கோட்ட பொறுப்பாளர் வைரவேல், இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story