பணம் பறித்த வழக்கில் தாதா ரவி புஜாரியின் கூட்டாளி கைது கர்நாடகத்தில் போலீசார் விரட்டி பிடித்தனர்


பணம் பறித்த வழக்கில் தாதா ரவி புஜாரியின் கூட்டாளி கைது கர்நாடகத்தில் போலீசார் விரட்டி பிடித்தனர்
x
தினத்தந்தி 25 Jan 2019 5:13 AM IST (Updated: 25 Jan 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய தாதா ரவி புஜாரியின் கூட்டாளியை கர்நாடகத்தில் வைத்து போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு தாதா ரவி புஜாரியின் கூட்டாளி தஸ்ரத் ஷிண்டே என்பவர் கைது செய்யப்பட்டார். இதுபோல அண்மையில் வில்லியம் ரோட்ரிக்ஸ் என்பவரும் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்போில் இந்த வழக்கில் தொடர்புடைய தாதா ரவி புஜாரியின் கூட்டாளி ஆகாஷ் ஷெட்டி(வயது30) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

இந்தநிலையில் அவர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடுப்பிக்கு சென்று ஆகாஷ் ஷெட்டியின் உணவகம் மற்றும் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவர் சிக்கவில்லை.

இந்தநிலையில் அவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது, அங்கு ஆகாஷ் ஷெட்டி காரில் வந்தார். அங்கு போலீசார் கண்காணித்து இருப்பதை கண்டதும் உஷாரான அவர், காரை உடனடியாக எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் அவரது காரை சுமார் 6 கி.மீ. தூரம் துரத்திச்சென்று மடக்கினர். இதனால் வேறுவழி இன்றி ஆகாஷ் ஷெட்டி போலீசாரிடம் சரண் அடைந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மும்பை அழைத்து வந்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை வருகிற 28-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story