அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்த 2,300 பேர் கைது
ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடித்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 1,518 பெண்கள் உள்பட 2,300 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 10,729 ஆசிரியர்களில் 4,740 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சதவீதம் 44 ஆகும்.
நேற்று 230 பள்ளிகள் செயல்படவில்லை. பெரும்பாலான பள்ளிகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் செயல்பட்டன. அரசு ஊழியர்களில் 10.97 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையில் 378 பேரும், ஊரக வளர்ச்சித்துறையில் 377 பேரும், 561 சத்துணவு ஊழியர்களும், 88 அங்கன்வாடி பணியாளர்களும், இதர துறைகளை சேர்ந்த 391 பேரும் ஆக மொத்தம் 1,795 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 912 பேர் பெண்கள்.
மொத்தம் உள்ள 16,362 அரசு ஊழியர்களில் 1,795 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நிலையில் அரசு அலுவலகங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 1,518 பெண்கள் உள்பட 2,300 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story