ஆம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு


ஆம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 4:00 AM IST (Updated: 25 Jan 2019 7:10 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம்பூர், 

ஆம்பூர் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு செல்ல பொதுமக்கள் ரெயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் மழைநீர், மற்ற காலங்களில் கழிவுநீரும் தேங்குவதால் பொதுமக்கள் அவ்வழியே கடந்து செல்ல பெரும் அவதிப்படுவர்.

இதனால் அப்பகுதியில் செல்வதற்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதனால் மேம்பால பணியை தொடங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுரங்கப்பாதை வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வந்தனர். சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கூறி 100–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தேங்கும் கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.


Next Story