இந்திய ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு
இந்திய ஜனநாயகத்தை காக்க அனைவரும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டார்.
வேலூர்,
ஒவ்வொரு ஆண்டும் 25–ந் தேதி தேசிய வாக்காளர்தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வேலூரில் 9–வது தேசிய வாக்காளர்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் இருந்து ஊர்வலம் நடந்தது. கலெக்டர் ராமன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்து மாணவ– மாணவிகளுடன் கோட்டை, மக்கான் வழியாக நகர அரங்கிற்கு நடந்து சென்றார்.
அதைத்தொடர்ந்து நகர அரங்கில் தேசிய வாக்காளர்தினவிழா நடந்தது. தேர்தல் தாசில்தார் பாலாஜி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் மெகராஜ் ஆகியோர் பேசினர். கலெக்டர் ராமன் தலைமை தாங்கி தேசிய வாக்காளர்தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:–
1950–ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அந்த தினம் தேசிய வாக்காளர்தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்த வாக்காளர்கள், 18 வயது நிரம்பியதும் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களை கவுரவப்படுத்தி ஜனநாயக மாண்பை காக்கும்வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாட்டின் ஜனநாயகத்தை கட்டிக்காக்கவே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. நமக்கு யார் தலைவராக வரவேண்டும் என்பதை முடிவுசெய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து தருகிறது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றவேண்டும். 1.1.2019–ந் தேதியை அடிப்படையாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்தோம்.
அதேபோன்று வயதானவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயர்களையும், மாற்றுத்திறனாளிகளின் பெயர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. கல்லூரிகளில் தேர்தல் எழுத்தறிவு சங்கம் தொடங்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்தை காக்க அனைவரும் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், தாசில்தார் ரமேஷ், நேருயுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் விஜயாராவ், செஞ்சிலுவை சங்க செயலாளர் இந்தர்நாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.