ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தம்: கோர்ட்டு உத்தரவைமீறி மறியலில் ஈடுபட்ட 1,300 பேர் கைது


ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தம்: கோர்ட்டு உத்தரவைமீறி மறியலில் ஈடுபட்ட 1,300 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 7:16 PM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவையும் மீறி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1,300 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

வேலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்நாளான 22–ந் தேதி தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 23–ந் தேதி மறியல் போராட்டம் நடத்தினர்.

3–வது நாளாக நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பளிகளில் ஆசிரியர்களின் வருகை இல்லாமல் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் குறைந்த அளவு ஆசிரியர்களை வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டது.

தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு 25–ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் அறிவிந்திருந்தனர்.

அதன்படி கோர்ட்டு உத்தரவை மீறி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூரில் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தை முன்னிட்டு துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், லோகநாதன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மறியல் போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து வேலூர்–சென்னை சர்வீஸ் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 1300 பேரை போலீசார் கைதுசெய்து சத்துவாச்சாரி பகுதியில் உள்ள திருமணமண்டபங்களில் தங்கவைத்தனர்.

முன்னதாக மறியல் போராட்டம் நடந்த இடத்திற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திகேயன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், பாலசுப்பிரமணியம், ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.


Next Story