செய்யாறு அருகே பள்ளியை திறந்து பாடம் நடத்திய பட்டதாரி இளைஞர்கள் பொதுமக்கள் பணத்தில் மாணவர்களுக்கு உணவு சமைத்தும் வழங்கினர்


செய்யாறு அருகே பள்ளியை திறந்து பாடம் நடத்திய பட்டதாரி இளைஞர்கள் பொதுமக்கள் பணத்தில் மாணவர்களுக்கு உணவு சமைத்தும் வழங்கினர்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 7:50 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே பள்ளியை திறந்து பட்டதாரி இளைஞர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். அத்துடன் பொதுமக்கள் பணத்தில் மாணவர்களுக்கு உணவு சமைத்தும் வழங்கினர்.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 22–ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உள்பட அரசு பள்ளிகளில் பணியாற்றிடும் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால் பள்ளி கடந்த 3 நாட்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. பள்ளிக்கு ஆசிரியர்கள் வராத நிலையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று பூட்டிய பள்ளியை பார்த்து ஏக்கத்துடன் கல்வி கற்க முடியாமல் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் வெம்பாக்கம் தாலுகா பொக்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ், கல்வி மேலாண்மைக்குழு தலைவர் பரந்தாமன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரண்டு பள்ளியை திறக்க முடிவு செய்து நேற்று காலை வட்டார கல்வி அலுவலர் அருணகிரியிடம் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து பள்ளியை திறந்தனர்.

அதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பி.எட். முடித்த பட்டதாரி இளைஞர்கள் தசரதன், தமிழ்செல்வி, குணசேகரன், ஏகாம்பரம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாண்டவமூர்த்தி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திட விருப்பம் தெரிவித்தனர். பின்னர் பட்டதாரி இளைஞர்கள் பள்ளியில் காலை இறைவணக்க கூட்டத்தினை நடத்தி முடித்து, வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.

அதே நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கிட பொதுமக்கள் தாங்களே முன்வந்து கொடுத்த பணத்தில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சமையல் செய்தனர். சமைத்த உணவினை பள்ளியின் உணவு இடைவெளியில் மாணவர்களை தரையில் அமர வைத்து பரிமாறினர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறுகையில், ‘இந்த பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 6 பேரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக பள்ளி பூட்டியே இருந்தது. பள்ளியில் படிக்கும் 78 மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என படித்த பட்டதாரி இளைஞர்களை கொண்டு பாடம் நடத்தி வருகிறோம் எனவும், ஊர் பொதுமக்கள் கொடுக்கும் பணத்தினை கொண்டு போராட்டம் முடியும் வரை மாணவர்களுக்கு மத்திய வேலையில் உணவு சமைத்து வழங்கிட உள்ளோம்’ என்றார்.


Next Story