4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,550 பேர் கைது
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 2,550 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப் பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதற்காக நேற்று காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காலை 11 மணியளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கோஷமிட்டனர். போராட்டத்தை ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கபாசு தொடங்கி வைத்தார்.
போராட்டம் காரணமாக அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் கலெக்டர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது போல் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் சூலூர் பள்ளப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்பட கோவையில் உள்ள பல பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது.
போராட்டம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கபாசு கூறியதாவது:-
இந்த போராட்டம் பொருளாதாரத்துக்கானது மட்டுமல்ல. கல்வி, வேலைவாய்ப்பை உள்ளடக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இது மாணவர்களின் கல்வித்தரத்தை மேலும் பாதிக்கும். எனவே ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் நிர்வாகிகள் செந்தில்குமார், இன்னாசி முத்து, சம்பத்குமார், மைக்கேல் ராஜ், முருகேசன், சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,550 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆசிரியை ஒருவர் தனது குழந்தையுடன் வேனில் ஏறி சென்றது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்திற்கு நேற்று அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பங்கேற்றனர். இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர். அரசு கல்லூரிகளில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி முதலாம் அகமதிப்பீட்டு தேர்வு நடைபெற உள்ளது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
Related Tags :
Next Story