ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி:-
நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய நிவாரணம் ஒரு சில பகுதியில் கொடுக்கப்பட்டு, மற்ற பகுதிகளுக்கு கொடுக்கப்படாமல் உள்ளது. அதனை அரசு உடனே வழங்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நாகை-தேமங்கலம் சாலையை நடப்பாண்டில் சீரமைக்க வேண்டும்.
மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் ஓர்குடி பிரபாகரன்:-
அரசு அறுவடை எந்திரங்களின் பற்றாக்குறையால் தனியார் அறுவடை எந்திரம் வைத்துள்ளவர்கள் அதிக வாடகை வசூல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அறுவடை எந்திரங்களுக்கான வாடகையை அரசே நிர்ணயித்து அதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்தவுடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான காப்பீடு தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் குரு.கோபி கணேசன்:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய சிறப்பு பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவைப்படும் இடங்களில் அதிகமாக திறக்க வேண்டும். தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாகளில் கஜா புயலால் 2 கி.மீ. தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால் 10 கி.மீ. வரை உப்புக்காற்று வீசியதால் நெற்பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, புயல் பாதித்த நாகை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் ஆகியவற்றில் பெற்றுள்ள விவசாய கடன் மற்றும் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கிராம விவசாயிகள் சங்க தலைவர் மணியன்:-
கஜா புயலால் வேதாரண்யம் பகுதியில் 14 ஆயிரம் எக்டேருக்கு மேல் சவுக்கு மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தமிழக முதல்-அமைச்சர், சவுக்கு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், தற்போது இதுவரை சவுக்கு மரங்களை கணக்கெடுக்கும் பணியோ, அதற்கான நிவாரணமோ வழங்கப்படவில்லை. எனவே, சவுக்கு மரங்களுக்குரிய உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம்:-
வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், நாகை ஆகிய ஒன்றியங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, மா, பலா, சவுக்கு முந்திரி, தேக்கு ஆகிய மரங்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை இதுவரை வழங்கப்படவில்லை. எனவே விவாசயிகள் வாழ்வாதாரத்தை காக்கின்ற வகையில் நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story