18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க நடவடிக்கை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க நடவடிக்கை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2019 11:00 PM GMT (Updated: 25 Jan 2019 6:35 PM GMT)

18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தேசிய வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்து, மாணவர்களுடன் பேரணியில் கலந்துகொண்டார்.

இதில் பங்கேற்ற மாணவ- மாணவிகள், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஜி.எஸ்.டி. சாலையில் பேரணியாக சென்றனர்.

தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாம்பரம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 1-9-2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஏறக்குறைய 35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது நீக்கல், சேர்த்தல் அனைத்தும் முறையாக செய்யப்பட்டு 31-1-2019 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

பல்வேறு முகாம்கள் மூலமும், நேரிடையாகவும் ஏற்கனவே சேர்த்தல், நீக்கல் எல்லாம் வெளியிடப்பட்டு உள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் விடுபட்டு இருந்தாலும் 31-1-2019 அன்று வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலுக்கு பின்னரும் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்படும்.

ஓட்டு அளிக்கும் உரிமையை புரிந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் களை சேர்க்க வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story