ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிர்ப்பு: திருச்சியில் நடுரோட்டில் நிர்வாணமாக நின்ற பூ வியாபாரியால் பரபரப்பு
திருச்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் நடுரோட்டில் நிர்வாணமாக நின்ற பூ வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள்-கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழி விடாமல் வந்த வழியே திரும்பி அனுப்பினர். மேலும் அவ்வழியாக யாரும் நடந்துகூட செல்ல முடியாத வகையில் சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடந்தது.
இப்படியாக, அவர்களின் போராட்டம் நீடித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை கண்ட, அருகில் வசிக்கும் பெரியமிளகுபாறையை சேர்ந்த பூ வியாபாரி சிவகுமார் என்பவர், மறியல் நடந்த சாலையில் உள்ளே செல்ல முயன்றார். அங்கு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் “விவசாயிகள் தங்கள் பிரச்சினைக்காக போராடியபோது எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு கை நிறைய சம்பளம் கொடுத்தும் போதவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
உடனே அரசு ஊழியர்களில் சிலர் ஆவேசத்துடன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சட்டையை பிடித்தனர். உடனே சிவகுமார் தனது மேல்சட்டையை கழற்றி எறிந்தார்.
நிலைமை விபரீதம் ஆகும் முன்பு சிவகுமாரை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் அவரை அலேக்காக தூக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை பார்த்து, ‘இங்கு பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தி கொண்டிருப்பவர்களை எவ்வளவு நேரமாக கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து நின்றுவிட்டு தற்போது என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள்” என சத்தமாக பேசிய அவர், திடீரென்று தனது லுங்கியையும் கழற்றி எரிந்துவிட்டு போராட்டத்துக்கு மத்தியில் நிர்வாணமாக நின்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர்தான் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையை எடுத்தனர்.
Related Tags :
Next Story