தர்மபுரி மாவட்டத்தில் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் பணிக்கு வராத ஆசிரியர்கள் உரிய விளக்கம் அளிக்க அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
தர்மபுரி,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கடந்த 22-ந்தேதி முதல் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்த போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 8,689 ஆசிரியர்களில் 5,897 பேர் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் சதவீதம் 67.87 ஆகும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு கடந்த 23-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பணிக்கு வராத 6,049 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மேற்பார்வையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பணிக்கு வராத ஆசிரிய, ஆசிரியைகள் மீது 17-பி பிரிவின்படி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வருகை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை அனுப்பி பாடங்களை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் மூலமாக உரிய கல்வித்தகுதி கொண்டவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிப்பதற்கான முதல்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story