திண்டுக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கழுத்தை அறுத்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது


திண்டுக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கழுத்தை அறுத்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 10:45 PM GMT (Updated: 25 Jan 2019 7:11 PM GMT)

திண்டுக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் குள்ளனம்பட்டி அருகேயுள்ள பர்மா காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 37). இவர்களுக்கு ராஜா (13) என்ற மகனும், ராகவி (8) என்ற மகளும் உள்ளனர். பிரபாகரன் கத்தார் நாட்டில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார். இதனால் கலைச்செல்வி குழந்தைகளுடன் பர்மா காலனியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி காலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் 5 தனிப்படை அமைத்து கொலையாளியை தேடினர்.

ஆனால், பிரபாகரனின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவி மாயமாகி இருந்தது. இதனால் கொலையாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே கலைச்செல்வியின் உறவினர்கள், கலைச்செல்வி வீட்டில் வேலை செய்த பெண், அவருடைய உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

இதில் வேலைக்கார பெண் செல்வியின் கொழுந்தனும், நல்லாம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவருமான சந்திரசேகர் (28), கலைச்செல்வியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம், அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் கோவையில் 2 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்தேன். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தேன். இங்கும் ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்த நிலையில் கலைச்செல்வியின் வீட்டில் எனது அண்ணி செல்வி 2 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். அவர் மூலம் கலைச்செல்விக்கு நான் அறிமுகம் ஆனேன்.

கலைச்செல்வி பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே செல்லமாட்டார். மேலும் பிரபாகரன் வெளிநாட்டில் இருப்பதால், காய்கறிகள் உள்பட வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும்படி என்னிடம் கூறுவார். அதன்படி நானும் பொருட்களை வாங்கி கொடுத்து வந்தேன். இதனால் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார்.

அதேநேரம் பிரபாகரன் வெளிநாட்டில் வேலை செய்வதால், வீட்டில் நிறைய நகைகள் மற்றும் பணம் இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் கலைச்செல்வியிடம் தாராளமாக பணம் புரள்வதை கவனித்தேன்.

எனவே, வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதற்காக 3 நாட்களாக நோட்டமிட்டு வந்தேன்.

இதற்கிடையே சம்பவத்தன்று குழந்தைகள் 2 பேரும் பள்ளிக்கு சென்றதும், நான் கலைச்செல்வியின் வீட்டுக்கு சென்றேன். அங்கு தனியாக இருந்த கலைச்செல்வியிடம் சிறிது நேரம் பேச்சுகொடுத்தேன். பின்னர் ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டுமா? என்று கேட்டேன். உடனே அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்து விட்டு வருவதாக கூறி அங்கிருந்து நகர்ந்தார்.

உடனே நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவருடைய கழுத்தை அறுத்தேன். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் அவர் கழுத்தில் இருந்த தாலிசங்கிலியை கழற்றினேன். அது ரத்தமாக இருந்ததால் கழுவி, கைகழுவும் இடத்தின் அருகிலேயே வைத்தேன். பின்னர் வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம், 2 செல்போன்களை எடுத்து கொண்டு தப்பிவிட்டேன். மேலும் தாலி சங்கிலியை எடுக்க மறந்து விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக, போலீசார் கூறினர்.

இதையடுத்து கலைச்செல்வி வீட்டில் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். உதவி செய்வதாக கூறி, பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story