“தேர்தலுக்காக ஸ்டாலின் நடத்தும் நாடகம்தான் ஊராட்சி சபை கூட்டம்” சரத்குமார் கடும் தாக்கு


“தேர்தலுக்காக ஸ்டாலின் நடத்தும் நாடகம்தான் ஊராட்சி சபை கூட்டம்” சரத்குமார் கடும் தாக்கு
x
தினத்தந்தி 26 Jan 2019 3:15 AM IST (Updated: 26 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

“தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகம்தான் ஊராட்சி சபை கூட்டம்” என்று சரத்குமார் கூறினார்.

தூத்துக்குடி, 

“தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகம்தான் ஊராட்சி சபை கூட்டம்” என்று சரத்குமார் கூறினார்.

சுற்றுப்பயணம்

சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சரத்குமார் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும். வருகிற மார்ச் மாதத்துக்கு பின்னர் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர் அறிமுகம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.என்னுடைய வாக்கு வங்கியை தெரிந்து கொள்ள வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளேன். 20 தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது. இடைத்தேர்தல் முடிந்து ஒரு வருடத்தில் மீண்டும் தேர்தல் வரும். அப்போது மக்களின் வரிபணம் தான் வீணாகும். இதனால் நான் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை. அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. அவை நிரூபிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவரை குற்றவாளி என கூற முடியாது. தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக நிற்க நினைத்து இருக்கலாம். அதனால் அவர் இங்கு வந்து பணிகளை தொடங்கி இருக்கலாம்.

ஸ்டாலின் நாடகம்

மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி வருகிறார். அதற்கு முன்பு அப்படி நடத்தப்பட்டு அடிக்கடி மக்களை சந்தித்து இருந்தால் அதனை ஏற்று கொள்ளலாம். ஆனால் தற்போது தேர்தலுக்காக ஸ்டாலின் நடத்தும் நாடகம்தான் ஊராட்சி சபை கூட்டம்.நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தால் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லை.

தனித்துப்போட்டி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை, வெளிநாடுகளில் செய்வது போல், மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத இடத்துக்கு இடம் மாற்ற வேண்டும். சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடந்து உள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

அ.தி.மு.க.வுடன் இத்தனை ஆண்டுகள் கூட்டணியில் இருந்து உள்ளேன். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ச.ம.க.வின் பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். அ.தி.மு.க. மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. சரத்குமார் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிகையை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராதிகா போட்டியா?

தி.மு.க சார்பில் தூத்துக்குடி தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிட இருப்பதாகவும், அதற்காக அ.தி.மு.க. சார்பில் ராதிகா சரத்குமாரை களம் இறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அதனை நான் தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரும் முடிவு செய்ய முடியாது’ என்று சரத்குமார் கூறினார்.

Next Story