மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அரசு ஆணையின் படி 2018-19-ம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில், பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இரு சக்கர வாகனங்கள் (மொபட் 50 சதவீதம் மானிய விலையில்) வாங்க நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஆதரவற்ற விதவை, பெண் குடும்ப தலைவராக கொண்டவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருமணம் ஆகாத 35 வயதுக்கு மேற்பட்ட முதிர் கன்னிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க வயது சான்றிதழ், புகைப்படம், இருப்பிட சான்று, இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணி சான்று, ஊதிய சான்று, தினக் கூலி அடிப்படையில் பணிபுரிபவராக இருந்தால் சொசைட்டியில் இருந்து சான்று, ஆதார் கார்டு, 8-ம் வகுப்புக்கான கல்வி சான்று, மாற்று சான்றிதழ், முன்னுரிமை பெற தகுதியுள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். சாதி சான்று (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும்), மாற்றுத்திறனாளியெனில் தேசிய அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்கள் இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் 50 சதவீதம் மானியம் அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்தி கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மானிய தொகை ரூ.25 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்பட உள்ளது. பேரூராட்சி பகுதியெனில் பேரூராட்சி செயல் அதிகாரியிடமும், நகராட்சி எனில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும், ஊரக பகுதி எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சிகள்) ஆகியோரிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க கடந்த 21-ந் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதாவது வருகிற 31-ந் தேதி மாலை 5 மணி வரை தொடர்புடைய அலுவலர்களிடம் இரு சக்கர வாகனம் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story